சீன நிறுவனங்கள் மூலம் பணம் பெற்றுக்கொண்டு இந்தியாவுக்கு எதிராக செய்திகளை வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ் நியூஸ் கிளிக் செய்தி நிறுவன ஆசிரியர் பிரபிர் புர்கயஸ்தா மற்றும், அமித் சக்ரவர்த்தியும் அக்டோபர் 3-ம் தேதி சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் நெவில் ராய் சிங்கம் தற்போது சீனாவின் ஷாங்காய் நகரில் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) விதிகளின் கீழ் நெவில் ராய்க்கு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது.
2021 ஆம் ஆண்டு விசாரணை தொடங்கப்பட்ட பின்னர் கடந்த ஆண்டு அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் ராய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் நெவில் ராயின் மின்னஞ்சல் மற்றும் சீன அரசாங்கத்தின் மூலம் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.