உஜ்வாலா பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு மானியமாக 450 ரூபாய் வழங்கப்படும் என்று ராஜஸ்தான் மாநிலத் தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க. வாக்குறுதி அளித்திருக்கிறது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு இம்மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, மிசோராம் மாநிலத்துக்கும், சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கும் கடந்த 7-ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
இதைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேச மாநிலத்துக்கும், சத்தீஸ்கரில் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25-ம் தேதியும், தெலங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. ஆகவே, ஆட்சியைத் தக்க வைக்க காங்கிரஸ் கட்சியும், ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க.வும் பகீரத முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
எனவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதோடு, ஏராளமான வாக்குறுதிகளையும் அள்ளி வீசி வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் கட்சி ஏராளமான இலவசங்களை அறிவித்திருக்கிறது. எனவே, காங்கிரஸ் கட்சிக்குப் போட்டியாக பா.ஜ.க.வும் பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகளுடன் தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார். அவருடன், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் இருந்தனர். இந்த அறிக்கையில், உஜ்வாலா பயனாளிகளுக்கு எரிவாயு மானியமாக 450 ரூபாய் வழங்கப்படும்.
2.5 லட்சம் அரசு வேலைகள் உருவாக்கப்படும், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியை அதிகரித்து ஆண்டுக்கு 12,000 ரூபாய் வழங்கப்படும். பொருளாதார அடிப்படையில் நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடப்புத்தகம், பை உள்ளிட்டவை வாங்குவதற்காக ஆண்டுக்கு 1,200 ரூபாய் வழங்கப்படும்.
40,000 கோடி ரூபாயில் மருத்துவ உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். பெண் குழந்தை பிறந்தால் குழந்தைகளின் பெயரில் 2 லட்சம் ரூபாய் சேமிப்பு பத்திரம், நிலம் ஏலம் விடப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு பாலிசி வழங்கப்படும் என மக்களைக் கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றிருக்கின்றன.