நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் ராக்கெட் பாகம் பூமியில் விழுந்ததாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி விண்ணில் செலுத்தியது. திட்டமிட்டபடி, 40 நாட்களில் நிலவை சென்றடைந்த சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்ட் 23-ம் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் தடம்பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இதைத் தொடர்ந்து, விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது. இதுதொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வந்தது.
இந்த நிலையில்தான், சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாகச் செலுத்திய LVM3 M4 ஏவுகணை வாகனத்தின் கிரையோஜெனிக் மேல் நிலை பகுதி, கட்டுப்பாடில்லாமல் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்ததாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பாக, இஸ்ரோ வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “சந்திரயான்-3 ராக்கெட்டின் கிரியோஜெனிக் பகுதி மீண்டும் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தது.
விண்கலம் ஏவப்பட்ட 124 நாட்களுக்குள் ராக்கெட் பாகம் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்திருக்கிறது. இந்திய நேரப்படி நேற்று மதியம் 2.42 மணியளவில் பூமியின் காற்று மண்டலப் பகுதிக்குள் நுழைந்தது. புவி மண்டல பகுதிக்குள் வந்த ராக்கெட் பாகம், பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு விழுந்திருக்கலாம். வடக்கு பசிபிக் பெருங்கடலில் ஏவுகணை விழக்கூடிய புள்ளி கணிக்கப்பட்டது.
ஏஜென்சி விண்வெளி குப்பைகள் ஒருங்கிணைப்புக் குழு (ஐ.ஏ.டி.சி.) பரிந்துரைத்த வழிகாட்டுதல்களின்படி, பூமியின் குறைந்த சுற்றுப்பாதை பொருட்களுக்கான “25 ஆண்டு விதிக்கு” முழுமையாக இணங்கி, ஏவப்பட்ட 124 நாட்களுக்குள் மறு நுழைவு நிகழ்ந்தது. சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க, இந்த ராக்கெட் பாகத்தை செயலிழக்கச் செய்தல் மற்றும் பணிக்குப் பின் அகற்றுவது, விண்வெளி நடவடிக்கைகளின் நீண்டகால நிலைத்தன்மையைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என்று தெரிவித்திருக்கிறது.