ஜெர்சி எண் 7 கொண்ட தோனியின் ஒரு ரன் அவுட்டிற்கு, 7 பேரை அவுட் செய்து பழிதீர்த்த முகமது ஷமி.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி நேற்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. சிறப்பாக விளையாடிய இந்திய அணி 397 ரன்களை எடுத்தது. 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பாதையை நோக்கி வந்தனர்.
அப்போது தனது அசத்திய பந்துவீச்சு திறமையை கொண்டு முகமது ஷமி விக்கெட் மழையை பெய்யவைத்தார். மொத்தமாக முகமது ஷமி 57 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டை வீழ்த்தினார்.
முகமது ஷமி, மிகவும் முக்கிய வீரர்களையே குறிவைத்து தூக்கினார் என்றே சொல்லலாம். முகமது ஷமி முதலில் டெவோன் கான்வே விக்கெட்டை வீழ்த்தினார், பின்னர் ரச்சின் ரவிந்திரா விக்கெட்டை வீழ்த்தினார்.
விக்கெட்டுக்கு பின்னர் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் சிறப்பாக விளையாடி வந்த சமயத்தில் அவர்களின் கூட்டணியை பிரித்து கேன் வில்லியம்சனின் விக்கெட்டை வீழ்த்தினார்.
பின்னர் அதே ஓவரில் களமிறங்கிய டாம் லாதமை டக் அவுட் செய்தார். அதன் பின் 46 வது ஓவரில் சிறப்பாக விளையாடி சதம் அடித்த டேரில் மிட்செல்லின் விக்கெட்டை வீழ்த்தினார்.
முகமது ஷமியின் விக்கெட் வேட்டை முடிவடைந்தது என்றும் எண்ணும் வேளையில் மிட்செல் சான்ட்னர் மற்றும் டிம் சவுத்தியின் விக்கெட்களை வீழ்த்தி தான் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என்பதை நிரூபித்தார்.
ஜெர்சி எண் 7 கொண்ட தோனியின் ஒரு ரன் அவுட்டிற்கு, 7 பேரை அவுட் செய்து பழிதீர்த்த முகமது ஷமி என்று தோனியின் இரசிகர்கள் முகமது ஷமியை பாராட்டி வருகின்றனர்.