சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் பல்வேறு கோவில்களில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று (நவ 16) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கோவில் நடையை மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி திறந்து வைத்தார். மண்டல பூஜைக்காக 41 நாட்களுக்கு நடை திறக்கப்பட்டு டிசம்பர் 27ஆம் தேதி நடை அடைக்கப்படும். பின்னர் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும்.
இந்நிலையில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தரகள் கார்த்திதை மாதம் பிறந்ததை முன்னிட்டு இன்று கோவில்களில் மாலை அணிந்து கொண்டனர். இதில் மண்டல பூஜை தரிசனத்துக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் 41 நாட்களும், மகரவிளக்கு தரிசனத்திற்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் 60 நாட்களும் விரதம் கடைப்பிடிப்பது வழக்கம்.
அதன்படி இன்று கார்த்திகை மாதம் பிறந்ததால், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். சென்னை, திருச்சி, மதுரை, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பூர் ஈஸ்வரன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் சபரிமலை செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.