உத்தரகண்ட் மாநிலத்தில் எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் தவிர்க்க வாகனத்தைத் திருப்பியபோது பள்ளத்தாக்கில் வேன் கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்.
உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டம் பாட்லோட்டில் இருந்து அம்ஜத் கிராமத்தை நோக்கி வேன் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. இந்த வேனில் 11 பேர் பயணம் செய்தனர். இந்த வேன், காலை 8 மணியளவில் சேடகான்-மிடார் சாலையில் சென்றுகொண்டிருந்தது.
அப்போது, எதிரே வந்த இரு சக்கர வாகனம் ஒன்று தவறான (எதிர்) திசையில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. இதைக் கண்ட வேன் டிரைவர், அந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, வாகனத்தை லேசாக திருப்பி இருக்கிறார். இதில், நிலை தடுமாறிய வேன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
தகவலறிந்து மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும், இச்சம்பவத்தில் அந்த வேனில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். மேலும், காயமடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்களில் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நைனிடால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரஹலாத் நாராயண் மீனா கூறுகையில், இவ்விபத்தில் ஒரு தம்பதி, அவர்களது குழந்தை என ஒரு குடும்பமே பலியானதாகத் தெரிவித்தார்.
இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.