ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் போராடி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் டென்னிஸ் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்கள் மட்டுமே கலந்துக் கொள்ளமுடியும்.
அந்த வகையில் இதில் பங்கேற்ற வீரர்கள் ரெட், கிரீன் என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை விளையாட வேண்டும்.
‘ரவுன்ட்-ராபின்’ முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிப்போர் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள்.
இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் டென்னிஸ் ‘நம்பர் ஒன்’ வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸ் உடன் விளையாடினார்.
இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 7-6, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் போராடி வெற்றிப் பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஜோகோவிச் ‘கிரீன் பிரிவில் 2 வது இடம் பிடித்து அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளார்.
இவர் தனது அரையிறுதி ஆட்டத்தில் ‘ரெட்’ பிரிவில் முதலிடம் பிடிக்கும் வீரருடன் விளையாடவுள்ளார். கிரீன்’ பிரிவில் சின்னர் முதலிடமும், ஜோகோவிச் 2 வது இடமும் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
அதேப்போல் ‘ரெட்’ பிரிவில் டேனியல் மெத்வதேவ் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளார். மற்றொரு வீரருக்கான இடத்திற்கு அல்காரஸ் மற்றும் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் இடையே போட்டி நடைபெறுகிறது.