ஆஸ்திரேலியாவில் சீக்கியர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் தாஸ்மானியாவில் உள்ள ஹோபர்ட் பகுதியில் உணவு விடுதி ஒன்றை நடத்தி வருபவர் ஜர்னைல் சிங். ஆஸ்திரேலியாவில் 15 ஆண்டுகளாக வசித்து வரும் இவர், 10 ஆண்டுகளாக தாஸ்மானியாவில் உள்ளார். கடந்த சில மாதங்களாக இவர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து ஜர்னைல் சிங் கூறியதாவது, இதற்கு முன்பு இதுபோன்று எனக்கு நடந்தது இல்லை. கடந்த இரண்டு, மூன்று மாதங்களாகத் தொடர்ந்து இனவெறி தாக்குதல் நடத்தப்படுகிறது. இது மனரீதியாகப் பெரிய அழுத்தம் ஏற்படுத்துகிறது. வீட்டுக்கு வெளியே காரின் கதவு கைப்பிடியில் 4 முதல் 5 நாட்களாக நாயின் கழிவுகளைப் பூசிவிட்டுச் சென்றனர்.
இனவெறியைத் தூண்டும் வகையில் வாகனம் நிறுத்தும் பகுதியில் சுவரின் மீது, சொந்த நாட்டுக்கு போ என்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இதுபற்றி காவல்துறையிடம் புகார் அளித்தேன். காணொளி சான்று இல்லாமல், நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது என்று கூறினார்.
தொடர்ந்து அவருக்கு, இரு முறை இனவெறி, மிரட்டல் கடிதங்களும் வந்துள்ளன. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக, தாஸ்மானியா காவல்துறை தெரிவித்துள்ளது.