உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக 22 மீட்டர் துளையிடப்பட்டுள்ளதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாரா சுரங்கப்பாதையின் ஒரு பகுதி நவம்பர் 12ஆம் தேதி இடிந்து விழுந்ததில் 40 கட்டுமான தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணி 6-வது நாளை எட்டியுள்ளது.
இதனிடையே மீட்புப்பணிக்காக டெல்லியில் இருந்து கொண்டு வரப்பட்ட கனரக துளையிடும் எந்திரம் நேற்று இரவு முதல் பணியை தொடங்கியது.
800 மி.மீ மற்றும் 900 மி.மீ விட்டம் கொண்ட குழாய்களை ஒன்றன்பின் ஒன்றாக உள்ளே செலுத்தி, அதன் வழியாக தொழிலாளர்களை மீட்பதற்கு 60 மீட்டர் வரை துளையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை 22 மீட்டர் துளையிட்டுள்ளதாகவும், இன்னும் 38 மீட்டர் துளையிட வேண்டும் என மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
மண் சரிவு ஏதும் ஏற்படாமல் இருந்தால் தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்தூரில் இருந்து விமானம் மூலம் மற்றொரு துளையிடும் எந்திரம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் அந்த எந்திரம் நாளை காலை வரும் என அவர்கள் கூறினர்.