வாராணசியிலுள்ள ஞானவாபி மசூதியின் அறிவியல் ஆய்வு அறிக்கையை தயார் செய்ய மேலும் 15 நாட்கள் கால அவகாசம் கோரி தொல்லியல் துறை சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதா் கோவில் அமைந்திருக்கிறது. இதன் அருகே ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி முகலாய மன்னா் ஒளரங்கசீப் ஆட்சியின்போது, காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டுக் கட்டப்பட்டதாக இந்துக்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக வாரணாசி நீதிமன்றத்தில் 5 இந்து பெண்கள் வழக்குத் தொடர்ந்தனர். இதையடுத்து, வாரணாசி நீதிமன்றத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது. ஆனால், கார்பன் டேட்டிங் ஆய்வு நடத்த மசூதி நிர்வாகம் எதிர்ப்புத் தெரிவித்ததால், அறிவியல் ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் மசூதி வளாகத்தில் சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே, தொடர்ந்து ஆய்வு நடத்த இந்துக்கள் தரப்பில் அனுமதி கோரிய நிலையில், நீதிமன்றமும் தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது. இந்த ஆய்வு கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், நவம்பா் 6-ம் தேதிக்குள் அறிக்கையை சமா்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, தொல்லியல் துறை தனது ஆய்வை நிறைவு செய்ததாக வாராணசி நீதிமன்றத்தில் தெரிவித்ததோடு, அறிக்கையை தாக்கல் செய்ய நவம்பா் 17-ம் தேதி வரை அவகாசத்தை நீட்டிக்குமாறு கேட்டுக்கொண்டது. இதன் பேரில் வாரணாசி நீதிமன்றமும் அவகாசம் அளித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஞானவாபி மசூதியின் அறிவியல் ஆய்வறிக்கையை தயார் செய்ய மேலும் 15 நாட்கள் கால அவகாசம் வழங்குமாறு தொல்லியல் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.