இந்திய அணி இதுவரை 3 முறை உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்குச் சென்றுள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா இதுவரை கடந்து வந்த பாதைக் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 48 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 47 போட்டிகள் முடிவடைந்துள்ளது. நவம்பர் 19 ஆம் தேதி இறுதிப்போட்டி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடவுள்ளது. 3 வது முறையாக தனது சொந்த மண்ணில் கோப்பையை வெல்ல வேண்டும் என்று இந்திய அணியும், 6 வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் ஆஸ்திரேலியா அணியும், 20 வருடங்களுக்கு பிறகு இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதவுள்ளது.
இந்திய அணியின் இறுதிப்போட்டிகள் :
இந்திய அணி இதுவரை 3 முறை இறுதிப்போட்டிக்குச் சென்றுள்ளது. முதல் முறை 1983 ஆம் ஆண்டு, இரண்டாம் முறை 2003 ஆம் ஆண்டு, மூன்றாம் முறை 2011 ஆம் ஆண்டு, ஆகிய ஆண்டுகளில் இந்திய அணியின் இறுதிப்போட்டியில் விளையாடியது.
1983 – முதல் உலகக்கோப்பை வெற்றி ஆண்டு!
3 ஆம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 1983 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்றது. சர்வதேச நாடுகளில் இருந்து மொத்தமாக 8 அணிகள் இந்த உலகக்கோப்பைத் தொடரில் பங்குபெற்றன.
இந்தத் தொடரின் போது அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 4 போட்டிகள் நடைபெறும், மொத்தமாக இத்தொடரில் 27 போட்டிகள் நடைபெற்றது.
இதன் லீக் போட்டியில் இந்திய அணி 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றிப் பெற்றது. ஆகையால் இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைத்தது.
அரையிறுதி போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்தை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா இறுதிவாய்ப்பை பெற்றது.
அதுவே இந்தியாவின் முதல் உலகக்கோப்பை இறுதிப்போட்டியாகும். புதியதாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்திய அணிக்கு எதிராக 2 முறை கோப்பையை வென்ற மேற்கிந்திய அணி விளையாடியது.
ஜூன் 25 ஆம் தேதி நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணியின் தலைவராக கபில் தேவ் இந்திய அணியை வழி நடத்தினார். இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 55 வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 183 ரன்களை எடுத்தது.
60 ஓவர்களில் 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய அணி 52 வது ஓவர் முடிய 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இரண்டு முறை கோப்பையை வென்ற மேற்கிந்திய அணியை வீழ்த்தி தனது முதல் உலகக்கோப்பை வெற்றியை இந்தியா பதிவு செய்தது.
2003 – மறக்குமா நெஞ்சம் ?
1983 ஆம் ஆண்டு வெற்றியை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் வெற்றியை நோக்கிய ஒரு பயணம் தான் 2003 ஆம் ஆண்டு.
மொத்தம் 14 அணிகள் பங்குபெற்ற இத்தொடரில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 3 போட்டிகள் என மொத்தமாக 54 போட்டிகள் நடைபெற்றது.
இதில் இந்தியா 9 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றிப் பெற்றது. 2003 ஆம் ஆண்டில் இந்தியா அரையிறுதியில் கென்யாவுடன் விளையாடியது.
இப்போட்டியில் இந்தியா, கென்யாவை 91 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்குச் சென்றது.
20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா கோப்பை வெல்லும் என்று அனைத்து இந்தியர்களும் எதிர்பார்த்த நேரத்தில் இறுதிப்போட்டிக்கு மற்றொரு அணியாக ஆஸ்திரேலியா நுழைந்தது.
இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 359 ரன்களை எடுத்தது.
360 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 40 வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 234 ரன்களை மட்டுமே எடுத்து கோப்பையை தவறவிட்டது.
2011 – 28 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வெற்றி !
28 வருடமாக இந்தியாவால் எட்டமுடியாத கனியாக இருந்த கோப்பையை இந்தியாவின் செல்லப்பிள்ளை தோனி பறித்துக்கொடுத்த வருடம்.
10- வது ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய மற்றும் வங்கதேசத்தில் நடைபெற்றது. இத்தொடரில் 14 அணிகள் பங்குபெற்றது. அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 2 போட்டிகள் கொண்ட இத்தொடரில் மொத்தமாக 49 போட்டிகள் நடைபெற்றது.
பிரிவு ‘எ’ மற்றும் பிரிவு ‘பி’ என பிரிக்கப்பட்ட இத்தொடரில் இந்தியா பி பிரிவில் இடம்பெற்றது. இதில் இந்தியா விளையாடிய 7 லீக் போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்றது, ஒரு போட்டி சமநிலை பெற்றது.
இத்தொடரில் இந்தியா அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் உடன் விளையாடியது, இதில் பாகிஸ்தானை 29 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
மும்பையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவுடன், இலங்கை அணி விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 274 ரன்களை எடுத்தது.
275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தோனி தலைமையிலான இந்திய அணி 49 வது ஓவரில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 277 ரன்களை எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 28 வருடங்களுக்கு பிறகு கோப்பையை வென்றது.
பிறகு நடைபெற்ற 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் உலகக்கோப்பையின் அரையிறுதியில் இறுதிவாய்ப்பை தவறவிட்டது இந்தியா.
இப்படி பல போராட்டங்களை, பல மகிழ்ச்சிகள், பல கண்ணீர்கள், பல வேதனைகளை கண்ட இந்தியா 12 ஆண்டுகளுக்கு பிறகு 2003-யில் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த அதே அணியுடன் மீண்டும் விளையாட உள்ளது.
அரையிறுதியில் நியூசிலாந்தை பழிதீர்த்த இந்தியா இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை பழிதீர்க்குமா ? பல இந்தியர்களின் கனவு நினைவாகுமா ? 3 வது முறையாக இந்தியா கோப்பையை வெல்லுமா ? இக் கேள்விகளுக்கு விடை நம் வீரர்கள் கையில் உள்ளது. ஜெய் ஹிந்த் !