திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாளை நடைபெறவுள்ள சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக, சென்னை – நெல்லை இடையே இரண்டு சிறப்பு இரயில்கள் இயக்கப்படுவதாகத் தென்னக இரயில்வே அறிவித்துள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ஆம் தேதி அதிகாலை யாக சாலை பூஜையுடன் தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், நாளை மாலை நடைபெற உள்ளது. சூரசம்ஹாரத்தைக் காண இலட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால், திருச்செந்தூர் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இந்த நிலையில், கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் திருச்செந்தூர் செல்ல வசதியாகத் தென்னக இரயில்வே சிறப்பு இரயிலை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையிலிருந்து இன்று இரவு 11:55 மணிக்குக் கிளம்பும் சிறப்பு இரயில் நாளை நண்பகல் 12:45 மணிக்குத் திருநெல்வேலியைச் சென்றடையும்.
மறுமார்க்கமாக நாளை இரவு 10:10 மணிக்கு நெல்லையில் இருந்து கிளம்பி, வரும் 19-ஆம் தேதி நண்பகல் 12:45 மணிக்குத் தாம்பரம் சென்றடையும் என்று தென்னக இரயில்வே தெரிவித்துள்ளது.