உத்தரகாண்டில் மலை சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 40 தொழிலாளா்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உத்தரகாசியில் பிரம்மகால்- யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது மண் சரிவு ஏற்பட்டது. இதில் 40 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 165 வீரர்கள் மற்றும் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் இருந்து கொண்டு வரப்பட்ட நவீன துளையிடும் கருவி மூலம் துளையிடும் பணி நடைபெற்று வந்தது. 60 மீட்டா் தூரம் துளையிடப்பட வேண்டிய நிலையில், 24 மீட்டா் தூரத்துக்கு துளையிடப்பட்டது. அப்போது திடீரென பயங்கர சத்தம் கேட்டுள்ளது.
இதனையடுத்து மீட்புப் பணி தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது. துளையிடும் கருவியில் எந்த கோளாறும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளே மண் சரிவு ஏற்பட்டிருக்கலாமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
இதனிடையே மீட்புப் பணிகளை பிரதமர் அலுவலகம் (PMO) துணை செயலாளர் மங்கேஷ் கில்டியால் நேரில் ஆய்வு செய்தார்.