ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெற இந்தியாவுக்கு ஆதரவளிப்பதாக பிரான்ஸ் உறுதியளித்துள்ளது.
5 நாடுகளைக் கொண்ட ஐ.நா. சபையின் அதிகாரமிக்க அமைப்பான பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் இந்த 5 நாடுகளும் வீட்டோ அதிகாரத்தால் ரத்து செய்ய முடியும்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 10 நாடுகள், நிரந்தரமற்ற உறுப்பினர்களாக உள்ளன. இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி அடிப்படையில் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த சூழலில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
கூடுதலாக 5 நிரந்தர உறுப்பு நாடுகளையும், 4 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளையும் சேர்க்க வேண்டும் என்று பெரும்பாலான நாடுகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இணைய இந்தியா, ஜப்பான், பிரேசில், ஜெர்மனி, நைஜீரியா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
நிரந்தர உறுப்பினர்களாக உள்ள 5 நாடுகளில், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ரஷியா ஆகிய நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க ஆதரவு தெரிவித்துள்ளன.
ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆக வேண்டும் என்பது இந்தியாவின் நீண்ட நாள் கனவு. ஆனால் ஒவ்வொரு முறையும் இந்தியாவை சீனா புறக்கணித்து வருகிறது.
இந்நிலையில், ஐக்கிய நாடுகளின் பிரான்சின் நிரந்தரப் பிரதிநிதியான நிக்கோலஸ் டி ரிவியர், பாதுகாப்புக் குழுவின் அதிகாரம் மற்றும் பிரதிநிதித்துவத்திற்கு சீர்திருத்தம் அவசியம் என்று தெரிவித்துள்ளார். விரிவாக்கப்பட்ட புதிய நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினர்கள் உட்பட கவுன்சில் 25 உறுப்பினர்களை கொண்டிருக்கலாம் ரிவியர் பரிந்துரை செய்துள்ளார்.
“நிரந்தர உறுப்பினர்கள் உட்பட ஆப்பிரிக்க நாடுகளின் வலுவான இருப்பைக் காண நாங்கள் விரும்புகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா, பிரேசில், ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஆதரவளிப்பதாக பிரான்ஸ் உறுதியளித்தது