பைக் ஓட்டு சர்ச்சையில் சிக்கிய தனுஷின் மகனை குட்டி டிடிஎப் ஆக மாறி இருக்கிறார் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி, பின்னர் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறமையாளராக உருவெடுத்துள்ளவர் தனுஷ்.
இவருக்கென தனி இரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் தற்போது கேப்டன் மில்லர் என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இப்படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது.
நடிகர் தனுஷின் சினிமா வாழ்க்கை சிறப்பாக அமைந்தாலும், அவர் தனது சொந்த வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்துள்ளார்.
இவருக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா உடன் திருமணம் ஆனது. இந்த ஜோடிக்கு 2006 ஆம் ஆண்டு யாத்ரா என்கிற ஆண் குழந்தை பிறந்தார்.
இதையடுத்து 2010 ஆம் ஆண்டு லிங்கா என்கிற மகன் பிறந்தார். கடந்த ஒரு வருடமாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் 17 வயதான தனுஷின் மூத்த மகன் யாத்ரா பைக் ஓட்டுவது போன்ற புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் போயஸ் கார்டன் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் ஆர்15 ரக பைக்கை பயிற்சியாளர் உதவியுடன் ஓட்டி பழகுவது போன்று அந்த புகைப்படத்தில் பதிவாகியுள்ளது.
இதனை அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அப்போது யாத்ரா உடன் வந்த உதவியாளர் அந்த செய்தியாளாரை வீடியோ எடுக்க விடாமல் தடுத்து வாக்குவாதம் செய்துள்ளார்.
உடனே இது ரோடு தானே நான் வீடியோ எடுப்பேன் என்று அந்த செய்தியாளர் கேட்டவுடன் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார் அந்த உதவியாளர்.
தனுஷின் மகனுக்கு இன்னும் 18 வயதே ஆகாத நிலையில், லைசென்ஸே இல்லாமல் அவர் போயஸ் கார்டனில் பைக்கில் சுற்றியது சர்ச்சையில் சிக்கி உள்ளது.
தனுஷும், ரஜினியும் யாத்ராவுக்கு புத்திமதி சொல்ல வேண்டும் என சிலர் வலியுறுத்தி வருகின்றனர். மறுபுறம் பைக் ஓட்டி பழகினால் என்ன தவறு என தனுஷ் இரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வழக்கமாக டிடிஎப் தான் பைக் ஓட்டு சர்ச்சையில் சிக்குவார். ஆனால் தற்போது தனுஷ் மகனும் அதுபோன்ற சர்ச்சையில் சிக்கி குட்டி டிடிஎப் ஆக மாறி இருக்கிறார் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.