அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக, நிறுத்தி வைக்கப்படுவதாக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம், செமஸ்டர் தேர்வு கட்டணத்தை 50 சதவீதம் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, தேர்வுக் கட்டணம் ஒரு தாளுக்கு 150 ரூபாயாக இருந்த நிலையில், 225 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
மேலும், இளநிலை செய்முறை சமர்ப்பிப்புக்கு 300 ரூபாயாக இருந்த தேர்வு கட்டணம், 450 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், தேர்வு கட்டணம் உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் வேல்ராஜ் கூறியதாவது, சில கல்லூரிகளில் தேர்வு கட்டணம் 50 சதவீதம் உயர்வு என்று மாணவர்கள் கூறியுள்ளார்கள்.
9 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது, தான் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. செலவுகள் அதிகம், தேர்வு தாள்களை திருத்த கட்டணம் அதிகம், இதர செலவுகள் உள்ளது.
10 ஆண்டுகளுக்கு பிறகு கட்டண உயர்வு என்பது 100 சதவீதமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், 9 ஆண்டுகளுக்கு பிறகு 50 சதவீதம் மட்டுமே கூட்டியுள்ளோம்.
ஜனவரி மாதம் முடிவு எடுக்கப்பட்டு மே மாதம் கொடுக்கப்பட்டது. பல கல்லூரிகளில் கட்டணம் வசூலித்து விட்டார்கள்.
தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த செமஸ்டரில் இருந்து புதிய தேர்வு கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது மாணவர்கள் கல்லூரிகளில் செலுத்திய கூடுதல் தேர்வு கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
எல்லா பல்கலைக்கழகத்திலும் ஒரே மாதிரி தேர்வு கட்டணம் வசூலிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும். இது தொடர்பான கூட்டம் விரைவில் நடத்தப்படும்.
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரி தேர்வு கட்டணம் உயர்வது சரியாக இருக்கும். சிண்டிகேட் குழுவினருக்கு பழைய கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தெரிவிக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.