பாரம்பரிய தொடக்க நாளையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை இலவசமாகக் காண சுற்றுலாப் பயணிகளுக்கு தொல்லியல் துறை அனுமதி வழங்கி உள்ளது.
பாரம்பரிய, கலாச்சார சின்னங்களை, அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்வதற்கும், பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18-ஆம் தேதி உலக பாரம்பரிய நாள் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில், நவம்பர் 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை, பாரம்பரிய வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாட்களில் புராதன சின்னங்கள் குறித்துக் கட்டுரை, ஓவியம் போன்ற கலைத்திறன் போட்டிகள் நடத்தி, தொல்லியல்துறை சார்பில் பரிசுகள் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், பாரம்பரிய தொடக்க நாளான நாளை, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டை, புலிக்குகை, ஐந்துரதம் பகுதிகளை இலவசமாகக் காணச் சுற்றுலாப் பயணிகளுக்கு தொல்லியல் துறை அனுமதி வழங்கி உள்ளது.
மேலும், மாமல்லபுரத்தில் இன்று சுற்றுலாத் துறை மற்றும் தொல்லியல் துறை சார்பில் விழாக்களும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதனை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.