வெற்றிகரமாக தொடங்கிய ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறயுள்ளது.
2003ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பைக்குப் பிறகு 20 ஆண்டுகள் கழித்து, இன்று அகமதாபாத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதுகின்றன.
அதாவது, 2003 உலகக் கோப்பையில் கங்குலி தலைமையில் விளையாடிய இந்திய அணி, இரண்டு போட்டிகளில் தான் தோல்வியுற்றது. இரண்டுமே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகள். அதில் இறுதிப் போட்டியும் ஒன்று.
இப்போது, அதேபோல் ஆஸ்திரேலியா அணி முதல் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அடைந்த தோல்விக்குப் பிறகு, தென் ஆப்பிரிக்காவிடமும் தோல்வி அடைந்து, பிறகு தொடர் வெற்றிகளைப் பெற்று இறுதிப் போட்டியில் இந்திய அணியை மீண்டும் சந்திக்கின்றது.
ஆகவே, 2003 உலகக் கோப்பை இறுதியில் அடைந்த தோல்விக்கு, இன்று அகமதாபாத் இறுதிப் போட்டியில் இந்தியா பழிவாங்கும் என்ற பேச்சுக்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
ஏற்கெனவே 2019 உலகக் கோப்பை அரையிறுதியில், நியூஸிலாந்திடம் தோற்றதற்கு அரையிறுதியில் மும்பையில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி பழிதீர்த்துக் கொண்டது. எனவே, அடுத்து ஆஸ்திரேலியா தான் இலக்கு என்று ரசிகர்கள் மத்தியில் கருத்துக்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த இறுதிப் போட்டியில் இந்தியா வென்றால் 3-வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டமாகும். ஆஸ்திரேலியா வென்றால், அது அவர்களது 6-வது உலகக் கோப்பை சாம்பியன் பட்டமாகும்.
ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் 13 முறை ஒருநாள் உலகக்கோப்பைப் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 8 முறையும், இந்தியா 5 முறையும் வென்றுள்ளன.
மொத்தமாக இரு அணிகளும் இதுவரை மோதிய 150 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா 83 போட்டிகளிலும் இந்தியா 57 போட்டிகளிலும் வென்றுள்ளன.
ஆஸ்திரேலிய அணி இதுவரை ஆடியதை வைத்துப் பார்க்கும் போது, அந்த அணியின் பலவீனம் என்றால் அது கேப்டன் பாட் கமின்ஸின் பெரிய தொடர்களுக்கான அனுபவமின்மை என்று கூறலாம்.
மறுபக்கம் ரோகித் சர்மா கைதேர்ந்த ஒரு கேப்டனாக தடாலடியாக கேப்டன்சி செய்து வருகிறார். ஒரு கேப்டனாக தானே முன்னின்று அதிரடியுடன் வழிகாட்டியாக வழிநடத்தி வருகிறார்.
இந்திய அணியின் பலம், எல்லாவற்றிற்கும் மேலாக ஆஸ்திரேலியாவுக்கு பெரிய அச்சுறுத்தல், இந்திய அணியின் பேட்டிங்தான். குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலி. இவர்களில் ஒருவர் அல்லது இருவருமே அதிரடியாக ஆடி வருகிறார்கள்.
ஆகவே இவர்களை தடுத்து நிறுத்தி வீழ்த்தினால்தான் ஆஸ்திரேலியா வெற்றிக்கனவையும் கூட காண முடியும். அதே போல் பவுலிங்கில் குல்தீப் யாதவ், ஷமி ஆஸ்திரேலியாவுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தல்.
இப்படி இந்திய அணிக்கு சாதகமாக பல விஷயங்கள் இருந்தாலும் இந்திய அணியின் வெற்றி நம் வீரர்களிடம் உள்ளது. வரலாறு திரும்புமா ? அல்லது திருத்தி எழுதப்படுமா? என்றுபொறுத்திருந்து பார்ப்போம். நம்பிக்கை வைப்போம், மூன்றாவது கோப்பையை அடிப்போம்!