தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, நீக்கம் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, ஒரே வாக்காளரின் பெயர் 2 இடங்களில் இருந்தால், வாக்காளரின் ஒப்புதல் பெற்று அவர்கள் எங்கு வாக்களிக்க விரும்புகிறார் என்பதை எழுத்தப்பபூர்வமாக பெற்ற பிறகு, மற்றொரு இடத்தில் உள்ள பெயர் நீக்கம் செய்யப்படும் என தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் வருகிற 25, 26-ந் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடத்தப்படும் என்றும், புதிய வாக்காளர்களை சேர்க்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் எப்போதும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுவதை சுட்டிக்காட்டிய அவர், வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்குப்பதிவை சரிபார்க்கும் கருவிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் சாகு குறிப்பிட்டார்.