உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்கள் அடுத்த இரண்டு அல்லது இரண்டரை நாட்களில் மீட்பு படையினரால் மீட்கப்படுவார்கள் என எதிர்பார்ப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
உத்தரகாசியில் பிரம்மகால்- யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது கடந்த 12ஆம் தேதி மண் சரிவு ஏற்பட்டது. இதில் 40 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஆகிய இருவரும் மீட்புப்பணிகளை இன்று (நவ.19) நேரில் ஆய்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து நிதின் கட்கரி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, இப்பகுதியில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தனியார் சுரங்கப்பாதை நிபுணர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
உள்ளே சிக்கியவர்களுக்கு உணவு, மருந்து, ஆக்ஸிஜன் ஆகியவை குழாய்கள் மூலம் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
சுரங்கப்பாதைக்குள் ஒளி மற்றும் போதுமான இடவசதி உள்ளதாகவும், தகவல் தொடர்பு இணைப்பு உள்ளது என்றும் அவர் கூறினார். சுரங்கத்தின் உள்ளே அதிக இட வசதி உள்ளதால் அவர்களால் எளிதில் நடமாட முடியும் என்றும் கட்கரி குறிப்பிட்டார்.
இயந்திரம் சரியாக வேலை செய்தால், அடுத்த இரண்டு அல்லது இரண்டரை நாட்களில் அவர்களை (பாதிக்கப்பட்டவர்களை) அடைய முடியும் என்றும் நிதின் கட்கரி தெரிவித்தார்.