ஹலால் தரச்சான்று பெற்ற உணவுகளுக்கு தடை விதித்து உத்தரப்பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமிய விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்ட உணவு, ‘ஹலால்’ என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு தயார் செய்யப்பட்ட உணவுகளுக்கு ஹலால் தரச்சான்று வழங்கப்படுகிறது. சில தனியார் நிறுவனங்கள் ஹலால் தரச்சான்று வழங்கி வருகின்றன.
இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் ஹலால் தரச்சான்று பெற்ற பொருட்களை விற்பனை செய்ய அந்த மாநில அரசு தடை விதித்துள்ளது.
ஹலால் தர சான்றுடன் கூடிய உணவுப் பொருட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவை உடனடியாக தடை செய்யப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
எனினும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உணவுகளுக்கு இந்த தடை பொருந்தாது என விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை மீறி செயல்படும் தனிநபர் மற்றும் நிறுவனத்துக்கு எதிராக சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
ஹலால் சான்றிதழானது உணவுப் பொருட்களின் தரம் குறித்த குழப்பத்தை உருவாக்கும் என்றும், உணவுச் சட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டத்தின் 89வது பிரிவின் கீழ் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உத்தரப்பிரதேச மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.