தமிழக விவசாயிகளை வஞ்சித்து வரும் மு.க.ஸ்டாலின், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி. ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் போராட்டக் குழு சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பி. ஆர். பாண்டியன் உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர். பாண்டியன், திருவண்ணாமலை மாவட்டம், மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் திரும்பப் பெற்றதை ஏற்றுக் கொள்கிறோம்.
அதே நேரத்தில், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் அருள் மீது போடப்பட்ட வழக்கை ஏற்றுக் கொள்ளமுடியாது. இது விவசாயிகளுடைய ஒற்றுமையை, அரசியல் உள்நோக்கத்தோடு பிரித்தாளும் சூழ்ச்சியாகும்.
குண்டர் சட்டம் போடப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் மாவட்ட காவல்துறை செயல்பட்டுள்ளது. இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அதே நேரத்தில், வழக்கை திரும்பப் பெறுவதற்கு அந்த மாவட்டத்தைச் சார்ந்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மூலம் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் பெறப்பட்டுள்ள கடிதம் விவசாயிகளின் ஜனநாயக உரிமையைப் பறிக்கும் செயலாகும்.
தமிழ்நாட்டில் விவசாயிகள் ஒப்புதல் இன்றி 18 மாவட்டங்களில், ஏரிகள், குளம், குட்டை உள்ளிட்ட நீர் வழி பாதைகளை மாற்றம் செய்வதற்கும் ஒப்புதல் அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023 உடனே திரும்பப் பெற வேண்டும்.
இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் ஒட்டு மொத்த தமிழக விவசாயமும் நிலத்தடி நீரும் நீராதாரத் திட்டங்களும் குடிநீர் ஆதாரமும் அடியோடு பறிபோகும் பேராபத்து ஏற்படும்.
தமிழக அரசின் இந்தத் தவறான நடவடிக்கையைக் கண்டித்து வரும் 21 -ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டமும், 29 -ம் தேதி சென்னையில் உண்ணாவிரதமும் நடத்தப்படும்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் செயல்படும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், தான் செய்த தவறுகளை உணர்ந்து , தானே முன்வந்து பதவி விலக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.