ஓடும் இரயிலில் பெண்ணிடம் அத்துமீறி அருவருப்பான செயலில் ஈடுபட்ட காவலர் கருணாகரனை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரோஜா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற பெண் பெருங்களத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 14 -ம் தேதி, சென்னை கிண்டி இரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் சென்ற இரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்துள்ளார்.
அப்போது, அந்தப் பெட்டியில் பயணம் செய்த ஆண் ஒருவர் திடீரென ஆபாச செயலில் ஈடுபட்டுள்ளார். இதை எதிர்பாராத அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்து, அவரிடம் சண்டை போட்டுள்ளார்.
பின்னர், போலீஸ்-ல் புகார் கொடுக்க ஏதுவாக, தனது செல்போனில் அந்த நபரது செயலை வீடியோ எடுத்துள்ளார். அதற்குள் ஓடும் இரயிலில் இருந்து அந்த ஆசாமி குதித்துத் தப்பிச் சென்றுவிட்டார்.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், தாம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கியதும் இது தொடர்பாக இரயில்வே போலீசாரிடம் தனக்கு நடந்த கொடுமை குறித்துப் புகார் தெரிவித்துள்ளார். கூடவே, வீடியோ ஆதாரத்தையும் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய இரயில்வே போலீசார் சிசிடிவி கேமரா காட்சி மற்றும் வீடியோ ஆதரங்களை சரி பார்த்தனர்.
அப்போது, அந்தப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் தாம்பரம் காவல் நிலையத்தில் சட்டம் – ஒழுங்கு காவலராகப் பணிபுரிந்து வரும் கருணாகரன் என்பதை உறுதி செய்தனர்.
பின்னர், வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில் காவலர் கருணாகரன் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.