மன்னார்குடியில் ஒரு லட்சத்து 37 ஆயிரம் மதிப்புள்ள 140 கிலோ குட்கா மற்றும் பான்மசாலா விற்பனை செய்த திமுக கவுன்சிலர் சிவசங்கர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மன்னார்குடி நகராட்சி திமுக கவுன்சிலராக இருப்பவர் சிவசங்கர். இவர், வெற்றிலை, சீவல் உள்ளிட்ட பொருட்களை மொத்தம் மற்றும் சில்லறையாக விற்பனை செய்து வருகிறார்.
இந்த நிலையில், மன்னார்குடி காவல்துறையினர் வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆவிக்கோட்டை பகுதியில் வசித்து வரும் சேகர் என்பவர் இருசக்கர வாகனத்தில் மூட்டை ஒன்றை ஏற்றிச் சென்றுள்ளார்.
அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை நிறுத்தி அவர் கொண்டு சென்ற மூட்டையைச் சோதனை செய்தனர். அதில், தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
இதனால், சேகரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில், மன்னார்குடியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் சிவசங்கரிடம் இருந்து குட்கா வாங்கிச் சென்றதாக வாக்கு மூலம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக, மன்னார்குடி டிஎஸ்பி அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ் உத்தரவின் பேரில், திமுக கவுன்சிலர் சிவசங்கர் வீட்டில் சோதனை செய்தபோது ஒரு லட்சத்து 37 ஆயிரம் மதிப்புள்ள 140 கிலோ குட்கா மற்றும் பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத்தொடர்ந்து சிவசங்கர், சேகர் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.