துபாயில் வெளுத்து வாங்கிய மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. திடீரென கொட்டித்தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர். கார்கள் பல நீரில் மூழ்கின. மழை காரணமாக சில விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.
தனியார் அலுவலக ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்றினர். நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
பொதுவாக கடும் வெப்பம் வாட்டி வதைக்கும் துபாயில் திடீரென கொட்டித்தீர்த்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனிடையே மழை தொடர்பான வீடியோக்களை துபாய் நகர மக்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.