திருவள்ளூர் அருகே இரயில் தண்டவாளத்தைக் கடக்கும் போது, மின்சார இரயில் மோதிய விபத்தில், தந்தை மற்றும் இருமகள்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேப்பம்பட்டு அருகே உள்ள பெருமாள்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். இவர் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
இந்த நிலையில், இன்று அவரைப் பார்ப்பதற்காக, தனது மகள்களான தர்ஷினி, தாரணி ஆகியோரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் செல்வதற்காக வேப்பம்பட்டு இரயில் நிலையத்திற்கு வந்தார்.
அவர்கள் தண்டவாளத்தைக் கடந்து செல்ல முயன்றனர். அப்போது, சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கிச் சென்ற மின்சார இரயில் அவர்கள் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட 3 பேரும் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் இரயில்வே போலீசார், 3 பேரின் உடலையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் இரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.