திமுக ஆட்சியில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளதாகப் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டா் க.கிருஷ்ணசாமி புகார் தெரிவித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளர் உள்ளிட்ட பட்டியல் இன மக்கள் மீது தொடா்ந்து நடைபெற்று வரும் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டி, புதிய தமிழகம் கட்சி சாா்பில் திருநெல்வேலியில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்தில், அக்கட்சியின் தலைவா் டாக்டா் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், தூத்துக்குடி அடுத்துள்ள மணக்கரையில் விவசாயி படுகொலை செய்யப்பட்டுள்ளது வேதனை தருகிறது. திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளதையே இது காட்டுகிறது.
தென் மாவட்டங்களில் வன்முறைகளைத் தடுக்க அதிக அளவில் தொழிற்சாலைகளைக் கொண்டு வரவேண்டும் என நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழுக்கள் பரிந்துரைத்தன.
நான்குனேரியில் பல நூறு ஏக்கா் நிலம் ஒதுக்கி தொழிற்சாலைகள் உருவாக்கப்படும் என முன்னாள் முதல்வா் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு தெரிவித்தது. ஆனால், இதுவரை அந்தத் திட்டம் செயல்படுத்தவில்லை.
அனைத்துத் தரப்பு மக்களையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தகுந்த நிவாரண உதவிகளை அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. ஏழை, எளிய மக்கள் மீது மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருகின்றன. இதை எதிா்த்து புதிய தமிழகம் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றார்.