காஸா மருத்துவமனையில் ஹமாஸ் தீவிரவாதிகளின் 10 மீட்டர் மற்றும் 55 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதைகளை இஸ்ரேல் இராணுவம் கண்டுபிடித்திருக்கிறது.
இஸ்ரேல் நாட்டின் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட 1,400 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு இஸ்ரேல் இராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. 43-வது நாளாக போர் நீடித்து வரும் காஸா நகரில் 12,000 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
முதலில் வான்வழித் தாக்குதலை மட்டுமே நடத்தி வந்த இஸ்ரேல் இராணுவம், தற்போது முப்படைகளையும் களத்தில் இறக்கி அதிரடி காட்டி வருகிறது. அந்த வகையில், காஸா நகரின் பெரும்பான்மையான பகுதிகளை இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றி இருக்கிறது. அதேசமயம், ஹமாஸ் தீவிரவாதிகள் சுரங்கப் பாதைகளுக்குள் பதுங்கிக் கொண்டு இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, மருத்துவமனைகள், குடியிருப்பு பகுதிகளின் அடியில் சுரங்கப் பாதைகளை அமைத்துக் கொண்டு மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் இராணுவம் குற்றம்சாட்டி வருகிறது.
அந்த வகையில், காஸா நகரின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனையின் அடியில் சுரங்கப்பாதை அமைத்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருந்தது. ஆனால், இதை ஹமாஸ் தீவிரவாதிகள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான், அல் ஷிபா மருத்துவமனையை இஸ்ரேல் இராணுவம் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதையடுத்து, அந்த மருத்துவமனையில் சல்லடை போட்டு இஸ்ரேல் இராணுவம் தேடிவந்தது. இந்த சூழலில், மருத்துவமனையில் அடியில் 10 மீட்டர் மற்றும் 55 மீட்டர் நீளமுள்ள 2 சுரங்கப் பாதைகளை இஸ்ரேல் இராணுவத்தினர் கண்டு பிடித்திருக்கிறார்கள். இதை வீடியோ ஆதாரத்துடன் இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டிருக்கிறது.
இது குறித்து இஸ்ரேல் இராணுவத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வீடியோ காட்சிகளுடன் வெளியிடப்பட்டிருக்கும் பதிவில், “இஸ்ரேல் பாதுகாப்புப்படை அல் ஷிபா மருத்துவமனைக்கு அடியில் ஹமாஸ் தீவிரவாதிகள் அமைத்திருந்த 10 மீட்டர் மற்றும் 55 மீட்டர் நீளமுள்ள 2 சுரங்கப்பாதைகளை கண்டுபிடித்திருக்கிறது. இந்த சுரங்கப்பாதையின் நுழைவு வாயில்கள் குண்டு வெடிப்பு தடுப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளைக் கொண்டதாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
இஸ்ரேல் இராணுவம் நுழைவதைத் தடுக்கும் வகையில், காஸா நகர மக்களையும், அல் ஷிபா மருத்துவமனை நோயாளிகளையும் ஹமாஸ் தீவிரவாதிகள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாக கடந்த சில வாரங்களாவே உலகிற்கு கூறி வருகிறோம். தற்போது அதற்கான ஆதாரமாக சுரங்கப்பாதை இருப்பதை கண்டுபிடித்து உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே, அல் ஷிபா மருத்துவமனை நோயாளிகளை வெளியேறும்படி இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இதற்கு மறுப்புத் தெரிவித்திருக்கும் இஸ்ரேல் பாதுகாப்புப்படை, நோயாளிகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும்படி மருத்துவமனை இயக்குனர் விடுத்த வேண்டுகோளின்படி, வேறு மருத்துவமனைக்கு மாற்ற சம்மதித்ததாக தெரிவித்திருக்கிறது.