ராமேஸ்வரத்தில் இருந்து காசி செல்லும் ஆன்மிகப் பயணத்திற்கான 300 பேரை தேர்வு செய்வதற்காக விண்ணப்பிக்கும் தேதி இன்றுடன் முடிவடைகிறது.
2022-23-ம் ஆண்டில், ராமேஸ்வரத்தில் உள்ள அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோவிலில் இருந்து, காசி விஸ்வநாத சுவாமி கோவிலுக்கு 200 பேர் ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர் என்றும், இதற்கான செலவினத் தொகை ரூ.50 லட்சத்தைத் தமிழக அரசே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 200 பேர் அரசு நிதியில் காசிக்கு ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த நிலையில், 2023-2024-ம் ஆண்டில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் இருந்து காசி விஸ்வநாத சுவாமிகோவிலுக்கு ஆன்மிகப் பயணமாக 300 பேர் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இதற்கான செலவினத் தொகை ரூ.75 லட்சத்தை அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆன்மிகப் பயணம் செல்ல அறநிலையத் துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில், தலா 15 பேர் வீதம் மொத்தம் 300 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கான விண்ணப்பப் படிவங்களைச் சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். இந்தப் பயணத்திற்கான 300 பேரை தேர்வு செய்வதற்காக விண்ணப்பிக்கும் தேதி இன்றுடன் முடிவடைகிறது.
















