பிரபல நடிகை த்ரிஷா மீது பாலியல் துன்புறுத்தல் செய்யும் வகையில் பேசிய, நடிகர் மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது.
நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி சக்கைப் போட்டு வருகிறது. இதில், இருதயராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் நடிதிருந்தார்.
திரைப்படம் குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், முன்பு எல்லாம், படத்தில் நடிகைகளை வில்லன் பாலியல் துன்புறுத்தல் செய்யும் காட்சி அதிகம் இருக்கும். இப்போது அது குறைந்துவிட்டது. அதுவும் இந்தப் படத்தில் த்ரிஷாவுடன் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அப்படி எதுவும் இல்லை எனச் சர்ச்சையாகப் பேசினார்.
இந்தப் பேச்சை பெண் வெறுப்பு, அவமரியாதை, மோசமான ரசனை என்றும், இது போன்ற வெறுக்கத்தக்க ஒரு நடிகருடன் காட்சியைப் பகிர்ந்து கொள்ளாததற்கு நன்றி என்றும், வரும் காலத்தில் இது போன்ற நடிகர்களுடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்றும் த்ரிஷா தெரிவித்துள்ளார்.
மேலும், மன்சூர் அலிகான் இந்தப் பேச்சுக்கு பாஜக மற்றும் மகளீர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில், தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
மேலும், நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க, தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.