இந்தியாவில் பணக்கார கோவில் என திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அழைக்கப்படுகிறது. திருப்பதிக்கு சென்றால் திருப்பம் நிச்சயம் என்பது பழமொழி. மேலும், வைணவ திருத்தலங்களில் முதன்மையானது திருப்பதி என்றும் போற்றப்படுகிறது.
புதிதாகத் திருமணம் ஆன தம்பதிகள், உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில், ஸ்ரீவாரி கல்யாணத்தில் பங்கேற்றால், சகல ஐஸ்வரியங்களும், திருமண வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் திருமஞ்சன சேவையில் கலந்து கொள்ளப் பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சிறப்பு வாய்ந்த ஏழுமலையானின் திருக்கல்யாண உத்சவத்தில் புதுமணத் தம்பதிகள் பங்கேற்க டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், புதுமணத் தம்பதிகளுக்கு ஒரு நாளைக்கு 20 டிக்கெட்டுகளை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு டிக்கெட்டும் 1,000 ரூபாய் ஆகும்.
இந்த டிக்கெட்டைப் பெறுவதற்கு, புதுமணத் தம்பதிகள் தங்களின் திருமணப் புகைப்படம் மற்றும் ஆதார் காடுகளைச் சமர்ப்பித்துப் பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கியக் கட்டுப்பாடுகளைத் திருப்பதி திருமலை தேவஸ்தானம் விதித்துள்ளது.