கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறை அருகே பிறந்து சில மணி நேரமே ஆன, ஆண் குழந்தை புதரில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறையில் இருந்து மங்காடு செல்லும் சாலையில், தினமும் ஏராளமான இரு சக்கர வாகனம் மற்றும் கார்கள் செல்வது வழக்கம். இதனால், இந்த சாலை எப்போதும் பரபரப்பு மிகுந்ததாக காணப்படும்.
இந்த நிலையில், அந்த சாலை வழியாக சென்றவர்கள் சாலையோரத்தில் குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டு, அதிர்ச்சி அடைந்தனர். உடனே, அழுகுரல் வரும் இடத்தை நோக்கி சென்று பார்த்தனர். அப்போது, பிறந்து சில மணி நேரம் ஆன ஒரு ஆண் குழந்தையை துணியில் சுற்றி புதரில் போடப்பட்டுள்ளது தெரிய வந்தது.
இந்த நிலையில், தற்செயலாக அந்த வழியாக முஞ்சிறை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக வாகனம் சென்றதை அறிந்த பொதுமக்கள், அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி, நிலைமையை எடுத்துக் கூறி, குழந்தையை எடுத்துச் செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, புதுக்கடை காவல் நிலைய எஸ்எஸ்ஐ செல்லத்துரை மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர் உள்ளிட்டோர் குழந்தையை பத்திரமாகக் குழித்துறை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
குழந்தையை புதரில் வீசியது யார் என்பது குறித்து புதுக்கடை போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா மூலம் ஆய்வு செய்து வருகின்றனர்.