மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் சிறப்பான வளர்ச்சியை அடைய முடியும். இது தான் இரட்டை எஞ்சின் ஆட்சி எனப்படுகின்றது என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
திம்மநாயக்கன் பாளையத்தில் இன்று நடைபெற்ற வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான லட்சிய வாகன பயணத் துவக்க விழாவில் உரையாற்றிய போது டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இவ்வாறு தெரிவித்தார்.
நமது பிரதமருக்கு பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் மீது தனி அக்கறை உள்ளது. அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு அவர் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.
முத்ரா வங்கி கடன் திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 24 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 50% தொகை பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஏழை எளிய மக்கள் எந்தவித பாகுபாடும் இல்லாமல் உயரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஆயுஷ்மான் பாரத் என்ற சுகாதார காப்பீட்டு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதில் ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவசமாக மருத்துவ சிகிச்சை பெறலாம். திட்டத்தின் பெயர்கள் இந்தியில் உள்ளன அதை பயன்படுத்தும் போது, நாம் மக்களுக்கு புரியும் வகையில் தமிழிலும் அந்த பெயரை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
குறிப்பாக ஜல்ஜீவன் இயக்கம் என்பதை இல்லம் தோறும் இனிய குடிநீர் என்று எழுதலாம் என தெரிவித்தார்.
முதலமைச்சர் ந. ரங்கசாமி தனது உரையில், நமது நாடு எல்லா நிலைகளிலும் எல்லா துறைகளிலும் சீரிய வளர்ச்சியை அடைய வேண்டும் என்று கருதி பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகள் பாராட்டத்தக்கவையாக உள்ளன என்று தெரிவித்தார்.
அரசுகள் அறிவிக்கின்ற திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும் சென்று சேரும்போதுதான் வளர்ச்சி என்பது சாத்தியமாகும். மக்களுக்கு அரசின் திட்டங்களை எடுத்துச் சொல்வதற்காகத்தான் இந்த விழிப்புணர்வு வாகன யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு தரும் நிதி உதவியோடு மாநில அரசின் நிதி உதவியும் சேரும் போது ஒரு பயனாளிக்கு முழுமையான உதவி கிடைக்கின்றது.
உதாரணமாக பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்குகின்றது. மாநில அரசு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனது பங்கையும் சேர்த்து ரூ.3 லட்சம் வரை வழங்குகிறது. பழங்குடியினருக்கு தனது பங்கையும் சேர்த்து ஐந்து லட்சம் ரூபாய் வரை வழங்குகிறது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர். பல்வேறு அரசு திட்டங்களில் பயன்பெற்றவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். சாதனை புரிந்த உள்ளூர் விளையாட்டு வீரர்கள் மற்றும் சமூக சேவகர்கள் நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர்.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பின்னர் துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனும் முதலமைச்சர் ரங்கசாமியும் பயண வாகனத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குறும்படத்தைப் பார்த்தனர்.