கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக, சென்னை – திருவண்ணாமலை இடையே, இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய, 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா வரும் 26-ஆம் தேதி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது.
கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு, கடந்த ஆண்டு 25 இலட்சம் பக்தர்கள் வருகை தந்தனர். தற்போது, 40 இலட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், பக்தர்கள் வசதிக்காக, தமிழகத்தின் தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பகுதிகளில் இருந்தும் 2 ஆயிரத்து 700 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பக்தர்களின் வசதிக்காக நவம்பர் 25, 26 மற்றும் 27 ஆகிய மூன்று தினங்களில் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கும் படுக்கை வசதியுடன் கூடிய 50 குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
அதுமட்டுமின்றி திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்து, திருவண்ணாமலைக்குச் சென்று வர நவம்பர் 24,25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தமிழக அரசுப் போக்குவரத்துத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.