சிறந்த பீல்டருக்கான விருதை தொடங்கி வைத்தவரே முடித்தும் வைத்துள்ளார்.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவுப் பெற்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி விளையாடிய ஒவ்வொரு போட்டிக்கும் பின்னரும் இந்திய அணியின் ஓய்வறையில் சிறந்த பீல்டருக்கான விருது வழங்கப்பட்டு வந்தது.
எப்போதும் சிறந்த பீல்டருக்கான விருது வழங்கும் போது ஓய்வறை முழுவதும் மகிழ்ச்சியாகவும், கொண்டாட்டமாகவும் காணப்படும்.
ஆனால் இறுதிப்போட்டியில் சிறந்த பீல்டருக்கான விருது அறிவிப்பின் போது ஓய்வறையே மயான அமைதியில் இருந்தது. எந்தவொரு வீரரும் ஓய்வறையில் எழுந்து நிற்கவோ, கைகளை தட்டவோ கூட இல்லை.
இந்த நிலையில் இந்திய அணி வீரர்களை பாராட்டும் வகையில் பீல்டிங் பயிற்சியாளர் திலீப், இதற்கு மேல் இந்திய அணி வீரர்களிடம் இருந்து என்னால் எதுவும் கேட்க முடியாது. ஏனென்றால் களத்தில் அனைத்தையும் முயற்சித்துள்ளோம். எனக்கு இது பெருமையளிக்கிறது.
இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதும் சிறந்த ஃபீல்டிங் செய்துள்ளோம். அதுமட்டுமல்லாமல் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்துள்ளோம்.
இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக ஃபீல்டிங் செய்ததோடு மட்டுமல்லாமல், அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் செயல்பட்ட வீரான விராட் கோலிக்கு சிறந்த பீல்டருக்கான விருதை அளிக்கிறோம் என்று தெரிவித்தார்.
அப்போது அனைத்து வீரர்களும் கைகளை தட்டி உற்சாகப்படுத்த ஜடேஜா வந்து விராட் கோலிக்கு மெடலை அணிவித்தார். ஆனால் அப்போதும் கூட சோகமாக வந்து விராட் கோலி அமைதியாக மெடலை வாங்கி சென்றார்.
இந்த உலகக்கோப்பை தொடரின் இந்தியாவின் தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியது. அதில் சிறந்த பீல்டர் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.
அதேபோல் கடைசி போட்டியும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடியதில் சிறந்த பீல்டர் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது.