தனது இனிமையான குரலால், மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்தவர் பின்னணி பாடகி பி.சுசிலா.
ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் 1935-ம் ஆண்டு பிறந்த சுசிலா, இசையில் முறையாகத் தேர்ச்சி பெற்று, பெற்றதாய் என்ற திரைப்படம் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகம் ஆனார்.
திரைதுறையில் சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் சுசீலா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, இந்தி, ஒரியா, சமஸ்கிருதம், சிங்களம் எனப் பல்வேறு மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி அசத்தியுள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் 2-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில், பின்னணி பாடகி பி.சுசீலாவிற்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற இவருக்கு ஏற்கனவே இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருது, 5 முறை தேசிய விருது, 3 முறை தமிழக அரசு விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகள் வழங்கி கௌவுரவிக்கப்பட்டுள்ளார்.
நான் மலரோடு தனியாக, அமைதியான நதியிலே ஓடம், அடுத்தாத்த அம்புதத்த, வாழ நினைத்தால் வாழலாம் போன்ற பாடல்கள் சுசீலாவின் குரலில் காலத்தால் மறக்க முடியாதவை.