வாடகைதாரர் புதிய மின் இணைப்பு பெற வீட்டு உரிமையாளரின் தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) தேவையில்லை என நாக்பூர் உயர் நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு நாக்பூர் உயர் நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நிலம் மற்றும் வீட்டின் உரிமையாளரிடம் இருந்து தடையில்லா சான்று பெறாவிட்டால் மின் இணைப்பு வழங்கப்படமாட்டாது என மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது மனுதாரர் தரப்பில், சொத்தின் தற்போதைய உரிமையாளரின் தாயுடன், சிறப்பு சிவில் வழக்கில் சமரச ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஆணையின் மூலம், மனுதாரர்களுக்கு விவசாய நிலத்தில் குறிப்பிட்ட உரிமை மற்றும் நிலத்துடன் இணைக்கப்பட்ட பெட்ரோல் பம்புகளின் டீலர்ஷிப் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
எனவே என்ஓசி வாங்குவது சட்டப்பூர்வமாக தேவையற்றது என கூறிய மனுதாரரின் வழக்கறிஞர் அது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மேற்கோள் காட்டினார்.
தற்போதைய உரிமையாளரின் தாயார் சமரச ஆணையின்படி சொத்தில் உரிமைகளைப் பெற மனுதாரர்களுக்கு உரிமை உண்டு என்றும், எனவே, மனுதாரர்களிடமிருந்து என்ஓசியை வலியுறுத்துவது நியாயமானதல்ல என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.