தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சுரினாம் நாட்டில் சட்டவிரோதமாகத் தோண்டப்பட்ட தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில், 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சுரினாம் நாட்டில் தங்கம் அதிகளவில் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நாட்டில் தங்க சுரங்கம் அமைக்க அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளின் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ளன.
இந்த நாட்டில் கடந்த சில வருடங்களாக, தங்கத்தை எடுப்பதற்காகச் சட்டவிரோதமாக சுரங்கங்கள் தோண்டப்படுகின்றன. அப்போது, மண்சரிவு உள்ளிட்ட விபத்துகளால், உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டுபவர்கள் மீது அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தபோதிலும், சுரங்கம் தோண்டுவதே அரசங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த நிலையில், சுரினாம் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கிராமத்தில் தோண்டப்பட்ட சுரங்கம் இடிந்து விழுந்ததில், 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும், சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில், காவல்துறை, இராணுவம் மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். தங்கம் எடுப்பதற்காக அங்குள்ள சிலரால் சுரங்கம் தோண்டப்பட்டதாக கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.