டெல்லி விமான நிலையத்தில் டெட்ரா பாக்கெட்டுக்குள் வைத்து கடத்தி வரப்பட்ட, ரூபாய் 2 கோடியே 24 இலட்சம் மதிப்பிலான, 4.2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
டெல்லி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள், தங்கள் உடைமைகளில் மறைத்து வைத்து தங்கம் உட்பட பல பொருட்களைக் கடத்தி வருவது வழக்கமாகி விட்டது. இவற்றைத் தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று விமானம் மூலம் பாங்காங்கில் இருந்து டெல்லி வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில், ஒரு பயணியின் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரைத் தனியாக அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக இருந்த இரண்டு டெட்ரா பாக்கெட்டுகளைப் பிரித்து பார்த்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
புதிய முறையில் டெட்ரா பாக்கெட்டுக்குள் தங்கக் கட்டிகள் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து, தங்கத்தைக் கடத்தி வந்த நபரைக் கைது செய்த அதிகாரிகள், அவரிடம் இருந்த ரூபாய் 2 கோடியே 24 இலட்சம் மதிப்பிலான, 4.204 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்தனர்.