உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியிலுள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் மேற்கொண்ட அறிவியல்பூா்வ ஆய்வின் இறுதி அறிக்கையை நவம்பர் 28-ம் தேதி சமர்ப்பிக்குமாறு இந்திய தொல்லியல் துறைக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதா் கோவில் அமைந்திருக்கிறது. இதையொட்டி ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி, முகலாய அரசா் ஒளரங்கசீப் காலத்தில் காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டுக் கட்டப்பட்டு என்று இந்துக்களும், இந்து அமைப்புகளும் கூறிவருகின்றனர்.
இது தொடர்பாக, இந்து மதத்தைச் சேர்ந்த 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மசூதியில் கார்பன் டேட்டிங் ஆய்வு நடத்த உத்தரவிட்டது. ஆனால், இதற்கு மசூதி நிர்வாகம் எதிர்ப்புத் தெரிவித்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடியது.
இதையடுத்து, மசூதியில் அறிவியல்பூர்வ ஆய்வு நடத்த தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது. இதற்கும் தடை கோரி மசூதி நிர்வாகம் மனு தாக்கல் செய்தது. ஆனால், அந்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. எனவே, மசூதி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தை நாடியது. அங்கும் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, ஜூலை 24-ம் தேதி தொல்லியல் துறை தனது ஆய்வைத் தொடங்கியது. இந்த ஆய்வின்போது, மசூதிக்குள் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே, விரிவான ஆய்வு நடத்த ஏதுவாக கூடுதல் அவகாசம் கோரி தொல்லியல் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஆய்வுக்கான காலக்கெடு அக்டோபர் 6-ம் தேதி நிறைவடைந்த நிலையில், மேலும் 4 வாரங்களுக்கு காலக்கெடுவை நீட்டித்து வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் பிறகு, இந்த வழக்கு நவம்பா் 2-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மசூதியில் ஆய்வு நிறைவடைந்து விட்டதாகவும், அறிக்கையை தொகுக்க வேண்டியிருப்பதால் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் தொல்லியல் துறை சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் நவம்பா் 17-ம் தேதி வரை அவகாசம் அளித்திருந்தது. ஆனால், தொல்லியல் துறை சார்பில் கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், வாரணாசி நீதிமன்ற நீதிபதியோ 10 நாட்கள் மட்டும் அவகாசம் அளித்து உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி, நவம்பர் 28-ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.