டெல்லியில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகத்தில் கிரிக்கெட் விளையாடிய அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை அருமையாக நடத்திய இந்தியாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
அரசு முறையப்பயணமாக டெல்லி வந்துள்ள ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங் டெல்லியில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகத்தில் கிரிக்கெட் விளையாடினார். பின்னர் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பேட்டையும் அவர் பரிசளித்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுபோன்ற உலகக் கோப்பையை சர்வ சாதாரணமாக நடத்திய இந்தியாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்வதாக கூறினார். இந்த போட்டியை லட்சக்கணக்கானோர் கண்டு ரசித்ததாகவும், அவர்களால் இதனை மறக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.
சச்சின் டெண்டுல்கரின் ஒரு நாள் போட்டியில் 50 செஞ்சுரி சாதனையை விராட் கோலி மிஞ்சியது போன்ற தருணங்கள் மறக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
நாம் அனைவரும் விரும்பும் விளையாட்டு நமது இரு நாடுகளுக்கு இடையேயான நமது தொடர்புகளையும் பாசத்தையும் வலுப்படுத்தும் பாலம் என்றும் பென்னி வோங் குறிப்பிட்டார்.