குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாகக் கொண்டு வரப்படவிருக்கும் 3 சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை என்று உள்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு தெரிவித்திருக்கிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு மாற்றாக புதிதாக 3 சட்டங்களை கொண்டு வர பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான மசோதாக்கள் மக்களவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டன.
அதன்படி, 1860-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய தண்டனை சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா என்றும், 1898-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டம், பாரதிய நாகரிக் சன்ஹிதா என்றும், 1872-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய சாட்சிகள் சட்டம், பாரதிய சாக் ஷயா அதீனியம் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
இச்சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, மேற்கண்ட விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. எம்.பி. பிரிஜ்லால் தலைமையிலான உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.
அந்த அறிக்கையில், “இச்சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டதில் எந்த சட்ட விதிமீறல்களும் இல்லை. அரசியல் சாசனத்தின் 348-வது பிரிவின்படி, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் பயன்படுத்தும் மொழியாகவும், சட்டங்கள், மசோதாக்கள் மற்றும் பிற சட்ட ஆவணங்களில் பயன்படுத்தும் மொழியாகவும் ஆங்கிலம் இருக்க வேண்டும்.
அந்த வகையில், தற்போது பெயர் மாற்றப்பட்டுள்ள சட்டங்கள் மற்றும் அதன் பெயர்கள் ஆங்கிலத்திலேயே எழுதப்படுகின்றனவே தவிர, ஹிந்தியில் எழுதப்படவில்லை. மேலும், இச்சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர் வைத்தாலும், அவை ஆங்கிலத்திலேயே எழுதப்படும். ஆகவே, இதில் எந்த சட்ட விதிமீறலும் இல்லை” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.