தமிழக அரசின் தலைமைச் செயலகம் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ளது. அமைச்சர்கள் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் கடைநிலை ஊழியர்கள் வரை தினமும் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.
இதில், சென்னை மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து தலைமைச் செயலகம் வந்து செல்லும் ஊழியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தலைமைச் செயலகப் பணியாளர்கள், கோட்டை இரயில் பாதையினைக் கடந்து அலுவலகம் செல்ல கடும் சிரமங்களை எதிர் கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
காரணம், சென்னை கோட்டை இரயில் நிலையத்தில் 4-வது இரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது மழைக்காலம் என்பதால், நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. மாலை நேரத்தில் எந்தவித மின்விளக்கு வசதியும் இல்லாததால், தலைமைச் செயலகப் பணியாளர்கள் அடிக்கடி கீழே விழுந்து விபத்தில் சிக்குவதாகக் கூறப்படுகிறது.
எனவே, தலைமைச் செயலகப் பணியாளர்கள் பாதுகாப்போடு கோட்டை இரயில் நிலையத்தைத் கடந்து அலுவலகம் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.