ஈரோடு மாவட்டத்தில் நள்ளிரவில் பெய்த தொடர் கனமழையால், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்தது. நள்ளிரவில், கிட்டத்தட்ட 3 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. குறிப்பாக, அன்னை சத்யா நகர் மற்றும் மல்லி நகரில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. வீடுகளில் புகுந்த வெள்ளநீரால், மின்சாதனப் பொருட்கள் சேதமடைந்தன. மாணவர்களின் பாடப் புத்தகங்கள் மழை நீரில் நனைந்தது.
வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை மக்கள் வாலியால் இறைத்து வெளியேற்றி வருகின்றனர். இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
நசியனூர் அருகே உள்ள சாமிகவுண்டன் பாளையம் பகுதிகளில் இருக்கும் ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலைகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக, சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் பெய்த கனமழையால், ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது குறிப்பிடத்தக்கது.