விசாகப்பட்டினத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த ஆட்டோ ஒன்று, லாரி மீது மோதியதில் 8 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் முக்கிய இடத்தில் சங்கம் சாரத் திரையரங்கம் உள்ளது. இந்த திரையரங்கம் அருகே இன்று காலை வழக்கம் போல் பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு ஆட்டோ ஒன்று சென்றுள்ளது.
அப்போது, சாலையில் வேகமாக வந்த லாரி மீது, அந்த ஆட்டோ மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த 8 குழந்தைகளும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.
உடனே, அருகில் இருந்தவர்கள் சாலையில் கவிழ்ந்த ஆட்டோவை தூக்கி நிறுத்தினர். மேலும், சாலையில் வீசப்பட்ட குழந்தைகளைப் பத்திரமாக மீட்டனர்.
விபத்தில் 8 குழந்தைகளில் 2 பேர் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். மற்றவர்கள் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், லாரி மீது ஆட்டோ மோதும் சிசிடிவி வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.