இந்தியக் கடற்படையின் அதிநவீன வழிகாட்டி ஏவுகணை அழிப்புக் கப்பலான ஐ.என்.எஸ். இம்பால் (யார்டு 12706), தனது முதல் பிரம்மோஸ் ஏவுகணைத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது. இதன் மூலம், இந்திய கடற்படையின் உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் ஆத்ம நிர்பார் பாரதத்தின் கப்பல் கட்டும் திறன்களின் வளர்ந்து வரும் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது.
ஐ.என்.எஸ். இம்பால் என்பது இந்திய கடற்படையின் வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிக்கும் 3-வது கப்பலாகும். இது இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் (WDB) வடிவமைக்கப்பட்டது. மேலும், மும்பையின் மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் மூலம் கட்டப்பட்டது.
ஐ.என்.எஸ். இம்பால் கப்பல் உள்நாட்டு கப்பல் கட்டுமானத்தின் ஒரு அடையாளமாகும். மேலும், இது உலகின் மிகவும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட போர்க்கப்பல்களில் ஒன்றாகும். 2-ம் உலகப் போரின்போது இம்பால் போரில் பங்கேற்ற இந்திய வீரர்களின் நினைவாக இக்கப்பலுக்கு இம்பால் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
இம்பால் கப்பல் 7,400 டன்கள் எடை மற்றும் 164 மீட்டர் நீளம் கொண்டது. தரையிலிருந்து வான்வழி ஏவுகணைகள், கப்பல் எதிர்ப்பு உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள், ஏவுகணைகள் மற்றும் டார்பிடோக்களை கொண்ட சக்திவாய்ந்த மற்றும் பல்துறை தளமாகும்.
4 எரிவாயு விசையாழிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வாயு மற்றும் (COGAG) உந்துவிசை தொகுப்பால் இயக்கப்படுகிறது. இது 30 வினாடிகளில் 56 கி.மீ. வேகத்தை அடையும் திறன் கொண்டது. இக்கப்பலில் சுமார் 75 சதவீதம் உள்நாட்டு தயாரிப்பு கொண்டது.