இராணுவ உளவு செயற்கைக்கோள், புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு சர்வதேச நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அமெரிக்கா, தென்கொரியா இணைந்து பல்வேறு தடைகளை விதித்த போதிலும், வடகொரியா அதைக் கண்டுக் கொள்ளாமல், தொடர்ந்து, ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
வடகொரியா தங்களது பாதுகாப்பை அதிகரித்துக் கொள்வதற்காக, உளவு பார்க்கும் செயற்கைக்கோளைத் தயாரித்து அதை விண்ணில் செலுத்துவோம் என அறிவித்தது. இந்த செயற்கைக்கோள் கொரிய தீபகற்பம், ஜப்பான் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கையைத் துல்லியமாக கண்டறியும் என்று கூறப்படுகிறது.
இந்த செயற்கைக்கோளைச் செலுத்தினால், பல்வேறு தடைகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்கா நேரடியாக எச்சரித்தது. ஆனால், வடகொரியா, கடந்த மே மாதம் ராக்கெட் ஒன்றை விண்ணில் ஏவியது. உளவு செயற்கைக்கோளைச் சுமந்து கொண்டு சென்ற அந்த ராக்கெட் வெடித்து சிதறியது.
இதனை அடுத்து, சொல்லிமா-1 என்ற ராக்கெட் உளவு செயற்கைக்கோளை மீண்டும் விண்ணில் ஏவியது. ராக்கெட்டின் மூன்றாவது நிலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறால் வெடித்து சிதறியது.
வடகொரியாவின் இரண்டு முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிலையில், தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து அதைச் சரி செய்தது.
இந்த நிலையில், மூன்றாவது முறையாக செலுத்தப்பட்ட உளவு செயற்கைக்கோள் சுற்றுவட்டப்பாதையில், வெற்றிகரமாகச் நிலைநிறுத்தப்பட்டதாக, வடகொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் இந்த செயலுக்கு தென்கொரியா மற்றும் ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.