டீப் ஃபேக் மூலம் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
சமீபகாலமாக, ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் நடிகர், நடிகைகளின் போலி வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், பிரபல நடிகைகள் கஜோல், ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் போலி ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இதையடுத்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித குலத்துக்கு மிகவும் ஆபத்தாக இருப்பதாகக் கருத்துத் தெரிவித்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதோடு, நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தார்.
இதைத் தொடர்ந்து, போலி வீடியோ, புகைப்படம் தொடா்பான ‘டீப் ஃபேக்’ தொழில்நுட்பம் குறித்து சமூக வலைத்தள நிறுவனங்களுடன் மத்திய தொலைத்தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கூகுள், நாஸ்காம் மற்றும் செயற்கை நுண்ணறிவில் (AI) பணிபுரியும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை எதிர்த்துப் போராடுவதில் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய அம்சங்களையும், கண்டறிதல், தடுப்பு, அறிக்கையிடல் வழிமுறைகள் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் எடுத்துரைத்தார்.
இதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “சமூக வலைத்தள நிறுவனங்களுடன் ‘டீப் ஃபேக்’ விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினோம். இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம். டீப் ஃபேக் மூலம் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பாக, அடுத்த 10 நாட்களுக்குள் தெளிவான செயல்திட்டங்களை கொண்டு வருவோம். இது பேச்சு சுதந்திரம் அல்ல என்பதை ஒட்டுமொத்த தொழில்துறையினரும் புரிந்து கொண்டனர். இது உண்மையில் சமூகத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய ஒன்று. இதற்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் தேவை.
ஆகவே, இன்று வரைவுச் சட்டத்தை உருவாக்கத் தொடங்குவோம். மேலும், மிகக் குறுகிய காலத்திற்குள், புதிய விதிமுறைகளை உருவாக்குவோம். தற்போதுள்ள விதிகளை திருத்துவது அல்லது புதிய விதிகளை கொண்டு வருவது அல்லது புதிய சட்டத்தை உருவாக்குவது போன்ற வடிவங்களில் ஒழுங்குமுறைகள் இருக்கலாம்.
சட்ட ரீதியாகவோ, ஒழுங்குமுறை ரீதியாகவோ, தொழில்நுட்ப ரீதியாகவோ முடிந்தவரை மிக அவசரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாங்கள் 4 அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
கண்டறிதல், தடுத்தல், அறிக்கையிடல் வழிமுறைகள் மற்றும் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் ஆகியவையாகும். ‘ டீப் ஃபேக் ‘ விவகாரம் தொடர்பான அடுத்த கூட்டம் டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும்” என்றார்.