உலக கோப்பையில் நாங்கள் அடைந்த தோல்வி மிகவும் வலியை கொடுத்ததாகவும் அதிலிருந்து மீண்டு வர இன்னும் நாட்கள் தேவைப்படும் என்று சூரியகுமார் யாதவ், கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறயுள்ளது.
இதில் முதல் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் இரவு தொடங்கவுள்ளது. மேலும் இந்த தொடரில் சூரியகுமார் தலைமையிலான இந்திய இளம் வீரர்கள் அணி களமிறங்கவுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சூரியகுமார் யாதவ், உலக கோப்பையில் நாங்கள் அடைந்த தோல்வி மிகவும் வலியை கொடுத்ததாகவும் அதிலிருந்து மீண்டு வர இன்னும் நாட்கள் தேவைப்படும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர், நம் தோல்விக்கு பிறகு அடுத்த நாள் எழுந்து அனைத்தையும் மறந்து விட முடியாது. அது மிகவும் கஷ்டம். ஏனென்றால் இது நீண்ட தொடராக நடந்தது. இந்த தொடரில் நாங்கள் வெற்றி பெறவே விரும்பினோம்.
ஆனால் நாளையும் சூரியன் உதிக்கும். இருளுக்கு முடிவில் நிச்சயம் வெளிச்சம் வரும். நாம் அதில் சிக்கி விடாமல் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்.
டி20 போட்டியை பொருத்தவரை முற்றிலும் புதிய வீரர்கள் தான் களமிறங்குகிறார்கள். இதனால் இந்த சவாலை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். உலகக்கோப்பை தொடரில் நாங்கள் பெருமைப்படும் அளவில்தான் செயல்பட்டோம்.
வீரர்கள் பலரும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினார்கள். நேர்மறையான கிரிக்கெட்டை நாங்கள் விளையாடினோம். ரோகித் சர்மா ஒரு கேப்டனாக வீரர்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார்.
உலகக்கோப்பை தொடரின் போது நாங்கள் வேறொரு ரோகித் சர்மாவை பார்த்தோம். அவர் என்ன பேசினாரோ அதை தான் செய்தார். அணி ஆலோசனை கூட்டத்தில் என்ன பேசினாரோ அதை தான் மைதானத்திலும் செய்தார்.
ரோகித் குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம். உலகக்கோப்பையில் செய்ததை நாங்கள் டி20 கிரிக்கெட்டிலும் செய்வோம் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.
மேலும் அவர், ” இன்று மதியம் தான் நான் வீரர்களை சந்தித்தேன். அவர்களிடம் பயமின்றி தைரியமாக விளையாடுங்கள் என்று கூறினேன். களத்திற்கு செல்லும் போது தனிப்பட்ட சாதனைகளை யோசிக்காமல் அணிக்காக விளையாடும் வீரராக நான் இருப்பேன்.
அதை தான் வீரர்களுக்கும் சொன்னேன். உங்களை விட அணி தான் முக்கியம் என்பதை நினையுங்கள் என்றேன். அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதனால் இனிவரும் அனைத்து போட்டிகளும் மிகவும் முக்கியம்.
இஷான் கிஷன் எங்கள் அணியில் இருக்கிறார். அவர் நன்றாக செயல்பட்டு வருகிறார். இதனால் அவருக்கு டி20 தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்” என்று சூரிய குமார் யாதவ் கூறினார்.