கங்குவா படப்பிடிப்பின் போது நடிகர் சூர்யா மீது ரோப் கேமரா அறுந்து விழுந்தது. இதில், சூர்யா படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இயக்குநர் சிவா இயக்கும் ‘கங்குவா’ திரைப்படத்தில் நடிகர் சூர்யா, பாலிவுட் நடிகை திஷா பதானி, நட்டி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்குத் தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இந்தப் படம் 3டி முறையில் 10 மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தின் படபிடிப்பு, சென்னை, கொடைக்கானல் உள்பட பல்வேறு பகுதிகளில் நடந்து வந்தது. இதனிடையே, தாய்லாந்தில் உள்ள அடர்ந்த காடுகளிலும் படபிடிப்பு நடந்து வந்தது.
இந்த நிலையில், கங்குவா படத்தின் கிளைமாக்ஸ் காட்சி சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக, கடந்த மூன்று வாரங்கள் தொடர் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்னை பூந்தமல்லி அருகே கங்குவா படப்பிடிப்பின் போது ரோப் கேமரா அறுந்து விழுந்தது. இதில், நடிகர் சூர்யா நூலிழையில் உயிர் தப்பினார்.
பூந்தமல்லி அடுத்தச் செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் சண்டை காட்சி தொடர்பான படப்பிடிப்பின் போது இந்த விபத்து ஏற்பட்டதாகவும், ரோப் கேமரா அறுந்து விழுந்த நிலையில், படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, விபத்து நிகழ்ந்த இடத்திற்கு நசரத்பேட்டை போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.